PAKEE Creation

"Enakku maazhaiyil Nanaivethendral Rompa Pidikkum Ean ental Appothuthan Naan azhuvathu Yaarukkum Theriyathu"

Sunday, July 19, 2009

சார்லி சாப்ளின் தில்


இந்த பாடல்வரிகளை கேட்டிருந்தாலும் இதன் பின்னணி பலருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ‘எந்தப்பாடல் வரி?’ என்பவர்களுக்கு. ‘தில்’ படத்துல வருமே… வேண்டும் வேண்டும் தீயைத்தீண்டும் தில் அந்தப் பாடலின் வரிதான்.

சார்லி சாப்ளின் நமெக்கெல்லாம் அறிமுகமானவர். அவரின் திரைப்படங்களை கண்டிராதவர்களுக்கும் அவர் அறிமுகமாகியிருப்பார், எதாவது ஒர் விதத்தில். அவரது கோமாளித்தனமான (சாப்ளின் தனமான என்றும் வாசிக்கலாம்) படங்களிலெல்லாம் ‘வலியவனை எளியவனால் வெல்லமுடியும்’ என்கிற ஒரே கருதான்.

ஏழ்மையும், வறுமையும்தான் இவரின் சுவாரஸ்யமான நகைச்சுவை படங்களுக்கு பின்னணி என்பது நகைமுரண்(Irony).

ஹிட்லர் ஆயிரக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்து தன்னை கொடுங்கோலனாக நிறுவிவிட்டிருந்த காலகட்டத்தில்(1940), சாப்ளின் ‘The Great Dictator’ (அந்த சிறந்த சர்வாதிகாரி)என்ற படம் ஒன்றை எடுத்தார். படத்தில் ஹிட்லரை ஒரு மனநோயாளிபோல சித்தரித்திருந்தார்.

சாப்ளினின் மற்ற குறும்படங்களைப்போலல்லாமல் இது இரண்டுமணி நேரம் ஓடுகிறது. படத்தில் நீண்டதொரு கதை. வெறும் காமெடி மட்டுமல்லாது உள்ளோடும் ஒரு சற்றே இறுக்கமான (காதல்) கதையும் ஓடுகிறது, கொஞ்சம் மெதுவாகவும் செல்கிறது இந்தப்படம்.

இந்தப்படத்தில் சாப்ளின் ரெட்டை வேடம் போடுகிறார். ஒருவர் சர்வாதிகாரி இன்னொருவர் சாதாரண சிகை திருத்துபவர்(Barber), யூதர்.

சிகை அலங்கரிப்பவர் வாழும் (யூத) சேரிக்கும் ஹிட்லரின் அரண்மனைக்குமாய் மாறி மாறி செல்கிறது கதை. சர்வாதிகாரியாக சாப்ளின் செய்யும் எதுவும் சிரிக்க வைக்கும். ஹிட்லரை மன நோயாளிபோல காண்பிக்கும் சில காட்சிகள் கேலி என்பதைவிட கடுமையான விமர்சனமாகவே காணப்படுகிறது.

ஒரு காட்சியில் ஹிட்லர் ஒரு அலமாரியைத்திறக்கிறார் அதில் பல விதங்களில் முகம்பார்க்கும் கண்ணாடிகள் அதில் முகத்தை சரி செய்கிறார். சில நேரம் குழந்தைபோல சிரித்துக்கொண்டே அறையிலுள்ள திரைச்சீலையில் ஏறுகிறார். கீழிறங்கி வந்து உலகப் பந்தை கையில் எடுத்து பலூனைத் தட்டி விளையாடுவதுபோல நடனமாடுகிறார். இதில் சாப்ளினின் நடிப்பு அபாரம்.

படத்தின் இறுதியில் ஹிட்லரைப் போலவே இருக்கும் சிகை அலங்கரிப்பவர் ஆள்மாறாட்டத்தினால் சர்வாதிகாரிக்குப்பதிலாக ஜெர்மனி படைவீரர்களுக்கு ஒரு உரை ஆற்றுகிறார். ஹிட்லரின் கருத்துக்களுக்கு நேரெதிரான கருத்துக்களை அந்த உரையில் வைக்கிறார், பின்பு தன் காதலியிடம் சேருகிறார். சுபம்.

ஹிட்லரின் வாழ்நாளிலேயே, ஹிட்லர் உலகையே மிரட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து ஒரு படமே எடுத்தைத்தான் ‘ஹிட்லர் காலத்தில்..சார்லி சாப்ளின் தில்’ என்கிறார் நம் கவிஞர்.

No comments:

Post a Comment